"தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி"அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி புகார் - திமுகவினர் எதிர்ப்பு!

தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் விபத்தில் உயிரிழந்தாக அதிமுக உறுப்பினர் புகார் கூறிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியின் 25ஆம் ஆண்டை எதிர்நோக்கி வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

திரு வி க நகரில் இருந்து மீன்வளக்கல்லூரி வரை புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் இருந்து ரோச் பூங்கா வரையில் உள்ள சாலை ஹெல்த் வாக் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு மகளிர் பூங்கா திறக்கப்பட உள்ளது. மச்சாது பாலம் சீரமைக்கப்பட உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு திட்டம் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. 

ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தனி நபருக்காக தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பின்னர் முதல்வரின் உத்தரவின் பேரில் தூய்மைப் பணிகளை மாநகராட்சியே மேற்கொள்ளும். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்படும் என்றார். 

திமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "காமராஜர் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. பாதாள சாக்கடை மூடிகள் அடிக்கடி சேதம் அடைந்து வருகின்றன என்றார். அதற்கு பதிலளித்த மேயர் அது, அதிமுக காலத்தில் போடப்பட்ட சாலை. விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் சந்திரபோஸ் பேசுகையில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். 

இந்நிலையில் தரமற்ற சாலையால் மாணவன் பலியானது குறித்து அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில் "பக்கிள் ஓடை ரோட்டில் மேடு பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தை சென்ற பள்ளி மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் சாலையை சீரமைக்க வேண்டும். தரமற்ற சாலை அமைத்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான மாணவன் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றார். 

ஆனால் அவர் தவறான தகவலை தெரிவிப்பதாக திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது சலசலப்பு நிலவியது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!