மார்ச் 29 முதல் சென்னை - தூத்துக்குடி இடையே இரவில் விமான சேவை: இன்டிகோ அறிவிப்பு !
சென்னை - தூத்துக்குடி இடையே இரவில் விமான சேவை வருகிற மார்ச் 29 முதல் தொடங்கும் என்று இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான தூத்துக்குடிக்கு, சென்னையில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ புதிய மாலை நேர விமான சேவையை அறிவித்துள்ளது.
இந்த புதிய சேவையானது வரும் மார்ச் 29 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பகல் நேரங்களில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த இரவு நேர சேவை தொடங்கப்படுகிறது.
விமான கால அட்டவணை:
இந்தச் சேவையின் கீழ், விமான எண் 6E 7605 சென்னையில் இருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பும் விமான எண் 6E 7606, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையை வந்தடையும்.
இந்த இரவு நேர விமான சேவை, வேலை நிமித்தமாகப் பயணம் செய்யும் பயணிகளுக்கும், அவசரத் தேவைக்காகச் சென்னை வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
