இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை பறிமுதல் - கடலோரப் பாதுகாப்புப் குழும போலீஸார் நடவடிக்கை.!
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளைக் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீஸார் இன்று அதிகாலை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தருவைகுளம் கடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியில், இன்று (25.02.2026) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகக் கடலோரப் பாதுகாப்புப் குழுமத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைக் கண்டறிந்தனர். அவைகளை சோதனையிட்ட போது 35 கிலோ எடை கொண்ட 77 பீடி இலை மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. சர்வதேசச் சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போலீஸார் வருவதைக் கண்ட கடத்தல் கும்பல், தங்களது பைபர் படகுடன் நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் தருவைகுளம் கடல் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாகக் கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சுமுத்து மற்றும் தருவைகுளம் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் கடல் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதியில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
