நடுக்கடலில் தத்தளித்த மணப்பாடு மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்பு.!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில், மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த திலக், சிலுவை, பிரைட்வின், ரபிஸ்டன், லபிஸ்டன் மற்றும் சிலுவைபிச்சை ஆகிய 6 மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாகப் படகின் எஞ்சின் பழுதானது. அதனைச் சரிசெய்ய முடியாமலும், செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாமல் மீனவர்கள் ஆழ்கடலில் தவித்தளித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 18-ஆம் தேதி ரபிஸ்டன் என்பவர் தனது மனைவி டிலெட்டாவுக்குச் சிரமப்பட்டுத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீனவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் ஆட்சியர் மற்றும் கடலோரக் காவல் படையினரிடம் மனு அளித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இதன் பிறகு கடலோரக் காவல் படையினருடன் இணைந்து மணப்பாடு மீனவர்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கன்னியாகுமரியிலிருந்து 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும், பழுதான படகையும் மீனவர்கள் கண்டுபிடித்துப் பத்திரமாக மணப்பாட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் மணப்பாடு கிராம மக்கள் முயற்சித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டதை அடுத்து, அந்த கிராமமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
