தவெக வில் தூத்துக்குடி அஜிதா மீண்டும் புறக்கணிப்பு.!- அஜிதாவுக்கு ஏற்படுத்தப்படும் அரசியல் பின்னடைவு தூத்துக்குடியில் திமுகவுக்கான வெற்றியாக அமையுமா !?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளராக J.K.R.ஜெ. முருகனை நியமித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
இதில் இணை கண்காணிப்பாளராக பாலசுப்பிரமணியன், எஸ்.டி.ஆர. ஷ்யாம் ஆகியோரையும் நியமித்து தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். தவெகவின் தொடக்க கால பணியாளராக தூத்துக்குடியில் களப் பணி செய்தவர் அஜிதா ஆக்னல். இவர் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் தலைவராக செயலாற்றி வந்த திமுக பிரமுகர் பில்லா ஜெகனின் தங்கை என்பதால் ரசிகர் மன்றத்தையும், ரசிகர்களையும் ஒருங்கிணைத்து கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தார். இவரது அரசியல் அறிமுகம் மாவட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்கவும் வைத்தது. இதனால் இவரை மாவட்ட செயலாளராகவும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகவும் கட்சி தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரையில் உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அஜிதாவும் பதவிகளை நோக்கி தனது அரசியல் பயணத்தை விரைவுபடுத்தினார். இந்த கால சூழ்நிலையில் தான் தவெகவின் தலைமை ஏற்று மக்கள் பணி செய்ய பாலா, எஸ்.டி.ஆர்.ஷ்யாம், ஜே.கே.ஆர்.முருகன், சுபத்ரா, கிஷோர், டேவிட் செல்வின் என பலரும் பலவிதமான அடையாளத்துடன் தவெகவில் ஐக்கியமானார்கள்.
பலரது படையெடுப்புக்கு பின் தூத்துக்குடி மாவட்ட தவெகவுக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டது. வந்தவர்கள் எல்லாருமே தொடக்க கால பணியாளர் அஜிதா வை எதிர்த்து அரசியல் செய்யத் தொடங்கினர். இதன் பிறகு தவேக தலைமையில் அஜிதா பின்னுக்கு தள்ளப்பட்டார். மாவட்ட செயலாளர் அறிவிப்பும் இங்கு நடக்கும் போட்டி அரசியலால் நிலுவையில் வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் தூத்துக்குடி அஜிதாவுக்கும் நேரடியாகவே முட்டலும் மோதலும் உண்டானதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்த உரசலுக்கு பிறகு அஜிதா ஓரங்கட்டப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒருவரை அதாவது தொழிலதிபர் ஜே.கே.ஆர். முருகன் என்பவரது மனைவி சுபத்ராவை (கட்சிக்குள் அறிமுகமே இல்லாத ஒருவர்) மாநில துணை பொதுச்செயலாளராக அறிவிப்பு செய்கிறார் புஷ்ஸி ஆனந்த். இந்த அறிவிப்பால் ஏற்பட்ட சர்ச்சை கட்சிக்குள் எதையும் மாற்றியமைக்க உதவவில்லை.
இந்நிலையில் தொகுதி வாரியாக தனித்தனியாக மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளியானது. இதில் தூத்துக்குடி தொகுதியை மையமாக கொண்ட மாவட்ட செயலாளர் பதவிக்கு காங்கிரஸ் பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜை (ஷ்யாம்) அறிவிக்கிறார்கள். இந்த தகவலை முன் கூட்டியே தெரிந்து கொண்ட அஜிதா தனது ஆதரவாளர்களுடன் சென்னை தவெக (பனையூர்) அலுவலகத்திற்கு விரைகிறார். அங்கே நியாயம் கேட்கிறார். தன்னுடைய உழைப்புக்கு கட்சியில் அங்கிகாரம் வேண்டும் என்று முறையிடுகிறார். இது சம்பந்தமாக கத்துகிறார், கதறுகிறார். கேட்பாரில்லாமல் போய்விட்டது. யாருமே செவி சாய்க்கவில்லை என்பதால் அஜிதா ஆதரவாளர்களிடையே எழுந்த கோபம் அனைவரையும் போராடத் தூண்டியது. இந்த கோபத்தின் உச்சக்கட்டம் தவெக தலைவர் விஜய் வருகையின் போது அவரது காரை மறிக்கவும் முயற்சிக்கப்பட்டது. இது இவரது அரசியல் வாழ்க்கைக்கும், உழைப்புக்கும் முடிவு கட்டிய நாளாகவும் மாறியது.
இதனைத் தொடர்ந்து எழுந்த மாபெரும் சர்ச்சைகளை அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் போனதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சிக்கு உட்பட்டார். இந்த பரிதாப சம்பவத்துக்கு கூட தவெக சார்பாக யாருமே ஆறுதலோ அனுதாபமோ சொல்லவில்லை. இவரை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்து செயல்பட்ட சதிகார கூட்டம் நடந்தவைகளை சமூக வலைதளம் மற்றும் செய்தி, ஊடகங்கள் வாயிலாக பிரபல படுத்தி தலைமையை வெறுக்க வைத்துவிட்டனர். இந்நிலையில் சமரச உடண்பாட்டிற்காக அஜிதா, புஸ்ஸி ஆனந்த் வீட்டிற்கு சென்ற போது தமிழ் மாநில பகுஜான் கட்சி தலைவரை மரியாதை நிமர்த்தமாக சந்திக்க நேரிட்டது. இதுவும் கட்சி தாவுகிறாரா? என்று செய்தியாக்கப்பட்டு பிரகடணபடுத்தப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து திமுகவுக்கு போகிறார், அதிமுகவுக்கு தாவுகிறார், நாம் தமிழர் கட்சியில் ஐக்கியமாகிறார் என்றெல்லாம் எதிரிகளால் வசைபட வைத்து அஜிதா வின் எதிர்கால அரசியலுக்கு பூட்டு போட்டாலும், தனக்கான பாணியில் தலைவர் விஜயை முதல்வராக்குவேம், தவெக வை ஆட்சியமைக்க உழைத்திடுவோம் என்ற முழக்கத்துடன் தொகுதிக்குள் மீண்டும் புரட்சிகரமாக களப்பணி ஆற்றிட தயாரானார். அப்படியாவது இரக்கப்பட்டு நமக்கான அரசியல் அடையாளத்தை தவெக தலைமை நம்மை தேடித்தரும் என்ற நம்பிக்கையில் நிர்வாகிகள் துணையின்றி தனது ஆதரவாளர்களுடன் என் வழி தனி வழி என்ற பாதையில் பயணிக்கிறார். இந்நிலையில் அரசியல் ரீதியாக தவெக சந்திக்கும் இந்த முதல் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகும் ஆசையில் கட்சியில் விருப்ப மனுவும் அளித்தார். தொகுதிக்குள் மாற்றத்தை எதிர்நோக்கும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற அஜிதா வை, தேர்தல் களத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த ஏற்படுத்தப்பட்ட முயற்சியில் ஈடுபட்டு வருபவர்களால் மீண்டும் அஜிதா வை ஒரு சர்ச்சைக்குள் சிக்க வைத்தனர். அதாவது, அஜிதாவுக்கு தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற பரிந்துரை லெட்டரை போலியாக ரெடி செய்து முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தை அவமானப்படுத்திஉள்ளதாக அந்த சங்க நிர்வாகிகள் குற்றம் சுமத்தியது அஜிதா வின் அரசியலில் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியது. இதுவும் திட்டமிட்ட சதியா? உண்மையா? என்பதை வெளிபடுத்த சட்ட ரீதியாக முன்னெடுக்க பரதர்நலச் சங்கமும் முன் வரவில்லை, அஜிதா தரப்பும் விரும்பவில்லை. ஆனால் இப்பிரச்சனை சமூக வலைதளத்தில் வைரலானது தான் மிச்சம்.
இந்நிலையில் தவெக சார்ந்து மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை தலைமை கழகத்தால் அறிவிப்பு செய்துள்ளார்கள். அதில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதாவுக்கு தலைமை வாய்ப்பு கொடுக்கும் என்று இவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பும் ஜே.கே.ஆர். முருகனுக்கு வழங்கி இருப்பது அஜிதா வை தடுமாற வைத்துள்ளது. கட்சி சார்ந்த அடுத்தகட்ட வாய்ப்புகளில் எனக்கான அரசியல் அடையாளத்தை தவெக தலைமை தகுந்த நேரத்தில் வழங்கி சிறப்பிக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த அஜிதாவுக்கு, தேர்தல் பொறுப்பாளர் நியமனம் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வாய்ப்பு தட்டி போனதால் வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று மீண்டும் அடுத்த கட்ட நம்பிக்கையை தவெக தலைமை மீது வைக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அஜிதாவுக்கு தூத்துக்குடி தொகுதியில் தவெக வின் அரசியல் அடையாளத்தை பெறுவதற்கான வாய்ப்பு சிறிதளவில் கூட இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக ஒலிக்கிறது. மேலும் அஜிதா வை புறம் தள்ளி புறக்கணித்துவிட்டு தவெக மேற்கொள்ளும் அரசியல் வளர்ச்சி தவெகவுக்கு தூத்துக்குடியில் முழுமையாக கிடைக்கப்போவதில்லை என்றும், அந்த முயற்சி தோல்வியில் தான் முடியும் என்றும் விஜய் ரசிகர் மன்றத்தை சார்ந்த கிளை நிர்வாகிகள் உறுதிபடுத்துகின்றனர். அஜிதா வுக்கு ஏற்படுத்தப்படும் அரசியல் பின்னடைவு தூத்துக்குடியில் திமுகவுக்கான வெற்றியாக தான் அமையும் என்பதால் இப்பிரச்சனையில் தவெக தலைவர் விஜய் தனி கவனம் செலுத்தி முடித்து வைப்பது தூத்துக்குடியில் தவெக வின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்பதை புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகி வருகிறது.
எது எப்படி ஆனாலும் இவைகளுக்கான நிரந்தர தீர்வு தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே நாமும் தவெகவினரோடு இணைந்து அதுவரையில் காத்திருப்போம்

