"டாஸ்மாக் கடை வேண்டாம்" - ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் - தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.!!
தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்கும் தீர்மானத்திற்கு, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு மதிப்பீடுகள் மற்றும் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டங்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. அப்போது, மாநகராட்சி பட்ஜெட்டைக் கண்டித்து அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவினர் வெளியேறிய பின், மாமன்றத்தில் 21 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அதில் 20-வது தீர்மானமாக, மாநகராட்சிக்குச் சொந்தமான "டோபிகானா" வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று கடைகளை, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை அமைக்க மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதற்க்கு, ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி மற்றும் ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மாமன்ற உறுப்பினர் கந்தசாமி “தயவு செய்து அனுமதிக்க வேண்டாம்” காலில் விழுந்து கேட்கிறேன் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டது கூட்டத்தில் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
இதற்கு பதிலளித்த ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை கடைகள் உள்ளன என்பது எனக்கு தெரியாது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ளனவா, எங்கு அமைந்துள்ளன என்பது பற்றியும் தெரியாது. அவர்கள் கடை கேட்டு வருகிறார்கள். அந்தக் கடையில் டாஸ்மாக் நடத்தக்கூடாது என்று என்னால் கூற முடியாது என்றார்.
மேயரின் அந்த பதில் செய்தி காதில் விழுந்தவுடன், கந்தசாமி ஒரு கணமும் தாமதிக்காமல் அறையை விட்டு விரைவாக வெளியேறினார். சில நிமிடங்கள் கழித்து அவர் கூட்ட அரங்கில் தோன்றினார். அவரது திடீர் வருகை அங்கு இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அரசுத் திட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது தூத்துக்குடி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

