தூத்துக்குடி: ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியை கைது.!

 

தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் அடித்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி ஜாய்ஸ் (45). இவர் தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி, ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் அடித்துள்ளார். இதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் இருந்த காயத்தைக் காட்டி தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்க மாணவியின் தாயார் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் பேசியுள்ளார். அப்போது, "மாணவிகள் படிக்கவில்லை என்றால் அப்படித்தான் அடிப்பேன்" என ஆசிரியை அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவியின் தாயார், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை ஜாய்ஸ் மாணவியைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் 115 (2) சட்டப்பிரிவின் கீழ் ஆசிரியை ஜாய்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பள்ளியில் ஆசிரியை ஒருவரே மாணவியைத் தாக்கிய சம்பவம் அப்பகுதி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி