ஆரல்வாய்மொழி: டெம்போ மீது கார் மோதல்: தாய், மகன் உள்பட 3 பேர் பலி:விபத்தில் இறந்த உறவினரை பார்க்க வந்த போது சோகம்.!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி துரைச்சி (வயது 42). இந்த தம்பதியின் மகன் கிஷோர் (18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். துரைச்சியின் தம்பி சுரேஷ் (40).

இந்தநிலையில் சுரேஷின் மைத்துனர் ஒருவர், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. மைத்துனர் இறந்த செய்தியை கேட்டதும் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

தனது அக்காள் துரைச்சி, கிஷோர், சித்தி சிவகாமி (55) ஆகியோருடன் நேற்று நாகர்கோவில் நோக்கி சுரேஷ் காரில் வந்தார். அந்த காரை சுரேஷ் ஓட்டினார். ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் நான்கு வழிச் சாலையில் கார் வந்தது. அங்கு பழுதான டெம்போ ஒன்று சாலையோரம் நிறுத் தப்பட்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக கார், அந்த டெம்போ பின் புறம் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அதிலிருந்து வெளியே வர முடியாமல் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினர். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இந்த பயங்கர விபத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால் துரைச்சி, கிஷோர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரை யும் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவகாமியும் இறந்தார். சுரேஷ் மட்டும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் சூப்பிரண்டு கலையரசன், நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிச்சையா, இன்ஸ்பெக்டர் பச்சைமால் மற் றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் பலியான துரைச்சி, கிஷோர், சிவகாமி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி