ரோட்டில் கட்டுக்கட்டாக கிடந்த ரூ.5 லட்சம்... போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு!
திருப்பூர்: சாலையில் கட்டு கட்டாக கிடந்த பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு காவல் துறையினர் பாராட்டு.
திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன். ஆட்டோ ஓட்டி வரும் இவர் வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் தனது வாகனத்தை நிறுத்தி பணி செய்து வருகிறார். இன்று காலை தனது உறவினர் பிரபு என்பவரை அழைத்துக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் பொழுது வளம் பாலம் பகுதியில் கீழே இருந்த பிங்க் நிற பையை எடுத்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து மதன் உடனடியாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் பணப்பையை ஒப்படைத்தார். பையினை சோதனை செய்து பார்த்தபோது 5,64,000 பணம் இருந்தது தெரிய வந்தது. அதே சமயம் ராஜஸ்தானை சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ஐந்து லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றபோது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்து விட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பையில் இருந்த அடையாளங்கள் மற்றும் பணம் உறுதி செய்யப்பட்ட பின்னர் தானாராமிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. துணை ஆணையர் தீபாசத்யன் மற்றும் உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர் மதனுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். மேலும் துணை ஆணையர் தீபாசத்யன் ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் பிரபு இருவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் ஒவ்வொரு குடிமகனும் இதே போல பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் பணம் இழந்தவர்கள் துயரப்பட்ட நிலையில் இரண்டு நல்ல மனங்கள் பணத்தை கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்தனர் அதேபோல ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
