பரந்துார் புது விமான நிலைய பணிகள் நிறுத்தம்; தொழில் பூங்கா அமைக்க அரசு ஆலோசனை என தகவல்.!

 

பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிட்காட்' தொழிற்பூங்கா அமைக்க, உயர்மட்ட அதிகாரிகள் நிலையில் ஆலோசனை நடத்தி வருவதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மிகவும் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் தவெக தலைவர் விஜய். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடர்வதற்கு தடை விதித்துள்ளார். 

கடந்த ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 1700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த நிலத்தை தமிழக அரசு நிலத்தின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தருமா? அல்லது அரசே தங்கள் வசம் வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. 

ஏனென்றால், இந்த நிலத்தை கடந்த ஆட்சியில் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தவில்லை. 1700 ஏக்கர் நிலங்களும் அந்தந்த நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு நேரடியாக பதிவு செய்து தரப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த நிலத்தை அரசு திருப்பித் தருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே ஆகும். 

தற்போது கையகப்படுத்தப்பட்ட அந்த 1700 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பூங்கா அமைக்கலமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலத்தை கொடுத்த உரிமையாளர்கள் சிலர் தங்கள் நிலம் மீண்டும் தங்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்றும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. நிலத்தை அரசுக்கு அளித்த உரிமையாளர்களுக்கு அரசின் சார்பில் அதற்கான தொகை வழங்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு நிலத்தை திரும்ப வழங்கினாலும், அவர்கள் பெற்ற தொகையை மீண்டும் அரசுக்கு செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

இதனால், இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பது முக்கியமானது ஆகும். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகரில் புதிய விமான நிலையம் வேறு ஏதேனும் அமைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அல்லது சென்னை விமான நிலையமே விரிவாக்கம் செய்யப்படுமா? இல்லாவிட்டால் இதே இட வசதியுடன் சென்னை விமான நிலையம் இயங்குமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.