தூத்துக்குடி: விமான நிலையம் அருகே நேற்று அரிதினும் அரிதான ஒரு சூறாவளி.! வானில் இருந்து தரை நோக்கி திடீரெனப் பாய்ந்த இந்த ராட்சத சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!
தூத்துக்குடியில் இன்று திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகப் போடப்பட்டிருந்த தற்காலிகத் தகர மேற்கூரை பறந்து வந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரெனப் பயங்கர வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அப்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையப் பணிகளுக்காகத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகர வீடுகளின் மேற்கூரைகள், சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் காற்றின் வேகம் தாங்காமல் திடீரெனப் பெயர்ந்து காற்றில் பறந்து வந்தன. அவை அங்குள்ள 'பீடவுன்' பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தின.
தற்போது அவர்கள் 6 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

