தூத்துக்குடி மாநகராட்சியில் பங்குதாரா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையுடன் எழில்மிகு நகரமாக உருவாக்கவும்,  நகரின் வாழ்வியல் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முத்து நகரின் பசுமைப் பயணம் என்ற திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி  மைய அலுவலகத்தில் வைத்து ஆணையாளர் ப்ாியங்கா தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் வ உ சி துறைமுக சபை பொறுப்புக் கழகம், மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பெருந்திரளான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா பேசுகையில் தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை போக்குவரத்து தொழில்துறை என பல்வேறு வகைகளில் வளர்ந்து வருவதால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது இத்திட்டத்தின் மூலம் நம் நகருக்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒரு டிஜிட்டல் அடித்தளத்தை ஏற்படுத்தும். இவற்றின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களிடம் உள்ள கருத்துக்கள் ஆலோசனைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் பங்குதாரர்களாகிய தங்களின் பங்களிப்பை தனியாகவோ ஒருங்கிணைந்தோ வழங்குவது குறித்து பரஸ்பரம் விவாதித்து நிறைவேற்றுவது குறித்து பேசினாா்.  

நிகழ்ச்சியின் மூலம் மரங்களை நடுதல், பூங்காக்களை பராமரித்தல், மரக்கன்றுகளை வளர்த்துக் கொடுத்தல், பொது சுவர்களில் வண்ணம் தீட்டி அழகுபடுத்துதல் விழிப்புணர்வு வாசகங்களை எழுதுதல். சாலையில் உள்ள தூசிகளை இயந்திரம் கொண்டு சுத்தம் செய்வது, மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வழிவகை செய்வது, உபகரணங்கள் வழங்குவது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை வழங்குவது, விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பாதுகாப்பான அமைப்பு ஏற்படுத்துதல், பொதுகழிப்பறை, பேருந்து நிலையம், இடுகாடு போன்றவற்றை உயர்ந்த தரத்தில் பராமரிப்பது, மற்றும் பங்குதாரர்களால் அவ்வப்போது தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான உத்திகளை செயல்படுத்துதல் போன்றவற்றில் பங்குதாரர்கள் தங்களது பங்களிப்பை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து  பேசிய பங்குதாரர்களில் பல்வேறு தரப்பினர் தங்களின் பங்களிப்பை வழங்க இசைவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.