ஃபுட் ரிவ்யூ : "FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே வீடியோ எடுக்க வேண்டும்"-யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு!

 

சமூக வலைத்தளங்களில் உணவு விமர்சனம் (Food Review) செய்யும் யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிவரும் காலங்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற உணவகங்களில் மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உணவு விமர்சனம் என்ற பெயரில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத கடைகளுக்கும் விளம்பரம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறையின் முக்கிய கட்டுப்பாடுகள்.

FSSAI உரிமம் கட்டாயம்: யூடியூபர்கள் வீடியோ எடுக்கும் கடைகளில் FSSAI உரிமம் (License) அல்லது பதிவுச் சான்றிதழ் நுகர்வோருக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய கடைகளில் மட்டுமே ரிவ்யூ எடுக்க அனுமதி உண்டு.

வெளித்தோற்றம் மட்டும் போதாது: உணவகங்களின் வெளித்தோற்றம் மற்றும் உள் அலங்காரங்களை (Ambience) மட்டுமே அழகாகக் காட்டி வீடியோக்களை வெளியிடக் கூடாது.

சுகாதாரத்தை கண்காணிக்க வேண்டும்: உணவகங்களில் தூய்மையான முறையில்தான் உணவு தயாரிக்கப்படுகிறதா? சமையலறை மற்றும் பணியாளர்கள் தூய்மையாக இருக்கிறார்களா? தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் யூடியூபர்கள் கவனித்து, பொறுப்புடன் வீடியோக்களை வெளியிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக, முறையற்ற அல்லது உரிமம் இல்லாத கடைகளில் பொதுமக்களைத் திசைதிருப்பும் வகையில் போலி விளம்பரங்கள் அல்லது ரிவ்யூக்கள் செய்யும் சமூக வலைத்தள பக்கங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், தரமான உணவகங்களை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்று சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், இந்த உத்தரவு சிறு குறு உணவகங்களையும், வளர்ந்து வரும் ஃபுட் லாகர்களையும் (Food Vloggers) எவ்வாறு பாதிக்கும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.



 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி