உடன்குடி கருப்பட்டியில் கலப்படம் : 75 சதவீதத்திற்கு மேல் சீனி கலந்த கருப்பட்டி, கற்கண்டு தயாரித்து விற்பனை - வியாபாரிகள் 5 பேருக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிப்பு.!
உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள். பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.
உடன்குடி பகுதியில் பெரும்பான்மை யான மக்களின் வாழ்வாதாரமாக இருந்த பனைத்தொழில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே செய்யும் நிலைக்கு தள்ளபட்டது. பனைத்தொழிலை அழியாத வண்ணம் காக்கும் வகையில் கருப்பட்டி, கற்கண்டு எப்படி தயாரிப்பது, பக்குவப்படுத்துவது என பல்வேறு நெறிமுறைகள் ஒன்றிய அரசு சார்பில் வெளியி டப்பட்டுள்ளது. பதனீரிலிருந்து காய்ச்சப்படும் ஒரிஜினல் கருப்பட்டி, கற்கண்டு சில்லறை விற்பனைக்கு ஜிஎஸ்டி கிடையாது. கருப்பட்டி சூப்பர் மார்க்கெட், மல்டிலெவல் மார்க்கெட் கடைகளில் விற்பனை செய்யப்படும் போது 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 75 சதவீதத்திற்கு மேல் சீனி கலந்த கருப்பட்டி, கற்கண்டு தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து ஒன்றிய அரசு ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து உடன்குடி பகுதிக்கு தினமும் டன் கணக்கில் சீனி கொண்டு வரப்படுவது குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கருப்பட்டி, கற்கண்டு தயாரிப்பது குறித்து ஒன்றிய அரசின் நெறிமுறைகளின்படி ஒரிஜினலாக காய்ச் சப்படுகிறதா என்று அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கருப்பட்டி, கற்கண்டுகளில் சுமார் 60 சதவீதம் முதல் 75 சதவீதம் சீனி கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சீனி கருப்பட்டியை வியாபாரிகள் ஒரிஜி னல் கருப்பட்டி என்று கூறி சொற்ப அளவில் வெறும் 5 சதவீத அளவுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி கட்டியது கண்டறியப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சரக்கு மற்றும் சேவை வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஆய்வு மேற் கொண்டதில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டறியப் பட்டது. சிலர் கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் சீனி வாங்கியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் கள் உற்பத்தி செய்த கருப்பட்டி, கல்கண்டு ஆகியவற்றை ஆய்வு செய்த போது சீனி கலந்து தயாரித்து 18 சதவீதம் ஜிஎஸ்டிக்கு பதிலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடன்குடி வியாபாரிகள் 5 பேருக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பனைத்தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் கூறுகையில், ''பனை மரத்தில் பதனீர் இறக்கி குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு கலந்து, பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். ''ஏப்ரல், முதல் ஜூலை வரை சீசன். ஆனால், சர்க்கரை கலந்த கருப்பட்டி ஆதிக்கம் காரணமாக, மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதில், எதிர்பார்த்த விலையின்றி முதலீட்டை இழந்து, வாங்கிய கடனை அடைக்க சிரமப்படுகிறோம். ''சீசன் இல்லாத போது, கிலோ, 300 ரூபாய்க்கு விலைபோகும். நல்ல வருமானம் கிடைக்கும். போலி கருப்பட்டி கிலோ, 150 -- 200 ரூபாய்க்கு விற்கின்றனர். கலப்பட கருப்பட்டியை ஒழிக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கலப்படத்தை தடுக்க கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு 2021 டிசம்பரில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அப்போதைய உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை ஆணையர் செந்தில் குமார் அனுப்பிய கடிதத்தில்
வெல்லம், கருப்பட்டி போன்றவை விவசாய நிலங்களின் அருகே சிறிய உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அங்கு தரமான வகையில் மண்டவெல்லம், அச்சுவெல்லம், பனங்கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு. கேமராக்களை பொருத்த வேண்டும். கலப்பட கருப்பட்டி பற்றி பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே கலெக்டர்கள் பிரபலப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அச்சுவெல்லம், மண்ட வெல்லத்தில் மைதா, சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், செயற்கை வண்ணம் சேர்க்கும் வேதிப்பொருள், சோடியம் ஹைட்ரோ சல்பேட் கலப்படமாக சேர்க்கப்படுகின்றன. கலப்படமில்லாத கருப்பட்டி பொதுவாக கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் கலப்பட கருப்பட்டி, மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.
ஆனால் மக்களுக்கு இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் பழுப்பு நிற கருப்பட்டியைவிட மற்ற நிற கருப்பட்டி நல்லதாக நினைக்கின்றனர். ஆனால் அவை உடல் நலத்திற்கு பாதிப்பை தரும் நிறமிகள் சேர்க்கப்பட்டவை ஆகும். இவற்றை தயாரிப்பவர்கள், சந்தையின் தேவைக்கு ஏற்ப கண்ணை கவரும் வண்ணங்களில் அவற்றை தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே கருப்பட்டி பற்றிய விழிப்புணர்வை மக்களிடமும், உற்பத்தியாளர்களிடமும் ஏற்படுத்துவது தற்போது அவசியமாகிறது. மேலும், கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களுக்கு சென்று, கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை சோதனை செய்வதும் அவசியமாகிறது. இந்த கலப்படத்தை தடுப்பதற்காக மாநில அளவில் கண்காணிப்பு குழுவை அமைத்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
