மக்கள் சந்திப்பு : தொடர்ந்து தாமதமாக வரும் அமைச்சர் ஸ்ரீநாத் - மக்களை சந்திப்பதை விட்டுட்டு காக்க வைப்பது தான் தவெக அரசு மேற்கொள்ளும் புதிய மாற்றமா? என மக்கள் கேள்வி.?
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தொகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவதை தனது வெற்றிக்கு பிறகு பழக்க வழக்கமாகவே வைத்துள்ளார். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகவே அமைச்சர் ஸ்ரீநாத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு மக்கள் குறைகளை கேட்டு மனுக்களை வாங்க இருப்பதாக நேற்று தொகுதி மக்களின் பார்வைக்கு அறிவிப்பாக வெளியானது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8:00 மணி முதலே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் மனு கொடுப்பதற்காகவே வந்திருந்தனர். தங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பது, குடிநீர் வராதது, உதவித்தொகை வராதது என பல்வேறு கோரிக்கைகளை முதன்மையாக கொண்டு காலை முதலே வெயிலுக்கு முன்பாக மனுவை கொடுத்துவிட்டு சென்று விட வேண்டும் என தொகுதி மக்கள் அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர். காத்திருந்த நேரம் கடந்து கொண்டே சென்றதால் பொதுமக்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் காலை 8 மணிக்கு வரவேண்டிய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், 8 மணிக்கு பதிலாக 11:30 மணி கடந்த போதிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவில்லை.
மனு கொடுக்க வந்த தூத்துக்குடி தொகுதி மக்கள் அமைச்சருக்காக காத்துக் கிடக்கும் அவலம் தான் நிலவுகிறது, இதுவே தான் தூத்துக்குடியில் தொடர்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் மக்கள் பிரதிநிதி குறித்த நேரத்திற்கு வருகை தந்து மக்களை சந்திப்பதை விட்டுட்டு காக்க வைப்பது தான் தவெக அரசு மேற்கொள்ளும் புதிய மாற்றமா? என்று எதிர்க்கட்சிகளை இச்சம்பவம் கேள்வி கேட்க தூண்டுகிறது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இதுபோன்று ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்கின்றனர் தொகுதி மக்கள்.
