தூத்துக்குடியில் லாக் அப் மரணம்? - விசாரணைக்குச் சென்ற வாலிபர் மரணம் – உறவினர்கள் போராட்டம்!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எஃப்.சி.ஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
