தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும். ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை.!
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் :-
தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது. தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
துறைமுகம், இரயில் நிலையம், நான்கு வழிச் சாலைகள் இணைப்பு என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது. அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ திரவ எரிபொருள் நிறுவனம், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைத் தளம் போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களும் கங்கை கொண்டான் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக விமான நிலையம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பல துறையினர் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது தூத்துக்குடி - சென்னை 4 முறை, தூத்துக்குடி -பெங்களூரு 1 முறை என விமானம் இயக்கப்படுகிறது. சிறிய ரக விமானம் இயங்கி வரும் நிலையில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது.
இந்நிலையில் தொழில் வளர்ச்சிக்கேற்ப விமானப் போக்குவரத்தை கூடுதல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புது டெல்லி, கொல்கத்தா நகரங்களுக்கு சென்னை வழியாகவும், மும்பை பெரு நகருக்கு பெங்களூரு வழியாகவும், ஹைதராபாத்திற்கு கோயம்புத்தூர் வழியாகவும் போயிங் ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கிட வேண்டும். பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் போது பயணிகளுக்கான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
