ஹெல்மெட் அணியாமல் சென்ற 19 வயது கல்லூரி மாணவர் தலை சிதறி பலி- கனரக வாகனங்களின் வேகம் குறித்து உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்

 

மீஞ்சூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தில் இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற சாலை விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொன்னேரியைச் சேர்ந்த லோகேஷ் (19), மணலியில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக மணலியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வரும் இவர், வார இறுதி நாட்களில் பொன்னேரியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வது வழக்கம் என தெரிகிறது.

அதன்படி இன்று இருசக்கர வாகனத்தில் பொன்னேரி நோக்கி சென்றபோது, நாப்பாளையம் பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை சரியாக கவனிக்காமல் அதன் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லோகேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. விபத்து நேரத்தில் அவர் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, லோகேஷின் உறவினர்கள், இப்பகுதியில் கனரக மற்றும் கண்டெய்னர் வாகனங்கள் அதிவேகமாகவும், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமலும் இயக்கப்படுவதாக குற்றம்சாட்டி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சாலையோரங்களில் இருபுறமும் கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படுவதும், பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் அவற்றை திடீரென இயக்குவதும் அடிக்கடி விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், உயிரிழந்த மாணவரின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!