தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய 3 மாவட்ட செயலாளர்கள் யார்.? எதிர்பார்ப்பில் தொண்டர்கள், கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள்.!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறுசீரமைப்பு பணி தமிழ்நாடு முழுவதும் மிக தீவிரமாக நடை பெற்று வருகிறது. அதன்படி 70 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மாவட்ட செயலாளர் பதிவி கிடையாது எனவும், 2 முறை மாவட்ட செயலாளராக உள்ளவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவியில் தொடர முடியாது எனவும் கழக செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 77 மாவட்டங்களாக இருந்த பதவிகள் தற்போது 110 மாவட்டங்களாக பிரித்து அதில் இளைஞர்களுக்கு முக்கியதும் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மாவட்டமாக இருந்தது தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்ட்டுள்ளது. இதன்படி மத்திய மாவட்டம் (தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம்), தெற்கு மாவட்டம் (திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்), வடக்கு மாவட்டம் (கோவில்பட்டி, விளாத்திகுளம்) என உருவாக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையிடம் இருந்து இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட புதிய 3 மாவட்ட செயலாளராகள் யார்? என்ற கேள்வி தூத்துக்குடி திமுகவுக்குள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதில் ஒவ்வெருவரின் ஆதரவாளர்களும் தங்களுடைய தலைவருக்கு ஆதரவாக "மீண்டும் நாங்க தான்" என்று விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளனர். இருந்த போதிலும் நடப்பு அரசியலின் படி திமுகவில் மாற்றத்தை விரும்பிய பலரும் நிரந்தர ஆளுமை கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு நிகராக இளைஞர்களுக்கு அதிகமான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள் எழுந்தது. இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அந்த புதிய மாற்றத்தின் படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தொகுதிகளையும் 3 மாவட்டமாக பிரித்தெடுத்து தூத்துக்குடி மத்திய மாவட்டம் (தூத்துக்குடி vs ஓட்டப்பிடாரம்), தூத்துக்குடி வடக்கு மாவட்டம் (கோவில்பட்டி vs விளாத்திக்குளம்), தூத்துக்குடி தெற்கு மாவட்டம் (திருச்செந்தூர் vs திருவைகுண்டம்) என்று திமுக தலைமையால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு இன்றைய நேரம் வரையில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் திமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு உத்தேச பட்டியலில் தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு கீதா ஜீவன் (அ) ஜெகன் பெரியசாமி என்றும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு வழக்கறிஞர் ஜோயல் என்றும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ என்றும் பேசப்பட்டு வருகிறது. மேலும் தென் மாவட்ட பொறுப்பாளராக எம்.பி கனிமொழி பதவி வகிப்பதால் கூடிய மட்டும் அவரது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகள் கிடைக்க வழி பிறக்கும். அதன்படி பார்க்கும் போது ஜெகன் பெரியசாமியும், எம்.எல்.ஏ மார்கண்டேயனும் கனிமொழி ஆதரவாளர்கள் என்பதால் இவர்களுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதாக நம்புகின்றனர். ஆனால், இதில் வழக்கறிஞர் ஜோயல் மட்டும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளராக இருப்பதால் கனிமொழியின் பரிந்துரை நிராகரிக்கபடுமா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்கள் மத்தியில் கவலைக்கிடமாகி வருகிறது.
இருந்த போதிலும் நாளைய அரசியலின் வெற்றிக்கு உதவிடும் வகையில் மாற்றத்தை செய்துவரும் திமுக தலைமை உள்குத்து அரசியலை புறக்கணித்து கட்சிக்கு என ஒரு புதிய பாதையை அமைத்து ஒற்றுமையை பலப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் புதிய மாவட்ட பொறுப்பாளர்களின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்கின்றனர் திமுக தொண்டர்கள். ஆகவே தூத்துக்குடி மாவட்ட திமுகவின் புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? என்பதை திமுக தலைமை தெரிவிக்கும் வரை பல்வேறு வியூகங்களை அவரவர் ஆதரவாளர்கள் வெளிப்படுத்துவதும் குறையப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
