திமுகவின் புதிய பாதை தூத்துக்குடியில் விடியலைத் தருமா.?
தூத்துக்குடி திமுகவுக்குள் ஆளுமை நிறைந்த மாவட்ட செயலாளர்களான கீதா ஜீவனும் அனிதா ராதாகிருஷ்ணனும் திமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் மாற்றப்படலாம் என்ற பேச்சு திமுகவுக்குள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது தலைமை கழகம் அறிவித்துள்ள விதிமுறைப்படி பார்க்கும் போது கீதா ஜீவன் இன்னும் ஒரு முறை பதவி வகிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் பெரியசாமியை தொடர்ந்து கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் கீதா ஜீவன் பதவி வகித்து வருவதால் இம்முறை மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கட்சி பொறுப்பை இம்முறை 3 மாவட்டமாக பிரித்து பொறுப்பு வழங்கிட திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் தூத்துக்குடி திமுகவுக்குள் பேசப்படுகிறது. நடைபெறும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் தூத்துக்குடியை ஒரு மாவட்டமாகவும், திருவைகுண்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியை மற்றொரு மாவட்டமாகவும், கோவில்பட்டி விளாத்திக்குளம் மூன்றாவது மாவட்டமாகவும் பிரிக்கப்படுவதால் இந்த மூன்று மாவட்டங்களுக்கும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கருணாநிதி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, இளைஞரணி ஜோயல், மாணவரணி உமரி சங்கர் உள்ப்பட அஜிதா ஆக்னல் வரையில் பெயர் பட்டியல் நீளுகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும். மேலும் கிளைக்கழகத் தேர்தல் மற்றும்
ஒன்றியச் செயலாளர் தேர்தலில் யாருடைய ஆதரவாளர்கள் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் எளிதாக மாவட்டச் செயலாளர் ஆகிவிட முடியும் என்றும் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
திமுக தலைமை இந்த முறை உட்கட்சி தேர்தலில் நேரடியாக தலையிடப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதால், உட்கட்சி தேர்தலுக்கான போட்டி கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கும் தூத்துக்குடியை மீட்டெடுக்க கனிமொழி தரப்பில் தூத்துக்குடி மேயர் ஜெகனுக்கே அதிகப்படியாக அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதே பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தூத்துக்குடி ஜோயலை முதன்மைப்படுத்தி வருவதாகவும் பேசப்படுகிறது. இதில் மேயருக்கு வாய்ப்பு கிடைத்தால் "மீண்டும் பெரியசாமி குடும்பத்திற்கு தான் வாய்ப்பா?" என்றும், இவர்களை விட்டால் தூத்துக்குடிக்கு வேறு ஆளே இல்லையா? என்ற குற்றச்சாட்டு தொடர்கதையாக மாறும் என்பதை மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கையாக இத்தகவலை திமுக தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ வேட்பாளர், எம்.பி வேட்பாளர் உள்ப்பட நியமன எம்.பி, மேயர் என்று அனைத்துக்கும் ஜோயல் பெயர் தான் முதன்மை படுத்தப்பட்டது. கனிமொழி vs உதயநிதி குரூப் பாலிட்டிக்ஸால் ஜோயலுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டது. ஆகவே நடப்பு அரசியலை சமாளிக்கவும், தவெக முன்னெடுக்கும் அரசியலை வீழ்த்தவும் இளைஞரணிக்கு வாய்ப்பு தாருங்கள் என்று திமுக தலைமையை உதயநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இம்முறை ஜோயலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் உமரி சங்கரும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்.
மேலும், திருவைகுண்டம் vs ஓட்டப்பிடாரம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா மற்றும் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராமஜெயம் பெயரும் திமுக தலைமையால் உச்சரிக்கப்படுகிறது. இதைப்போலவே கோவில்பட்டி vs விளத்திக்குளம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு கருணாநிதி எம்.எல்.ஏ மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பெயரும் திமுக தலைமையால் உச்சரிக்கப்படுவதாக தெரிய வருகிறது. இதில் வாய்ப்பு கிடைப்பார்கள் புதிய பாதையை அமைத்து அரசியலில் ஓர் புதிய புரட்சியை உருவாக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு தூத்துக்குடி திமுகவை உசுப்பி வருகிறது.
இதில் மேயர் ஜெகனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கிட வேண்டும் என்று திமுக தலைமையிடம் கனிமொழி எம்.பி யும், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வும் கடுமையாக முயற்சித்தாலும், இவர்களது மாற்று வேட்பாளராக இவர்கள் இருவரும் அஜிதா ஆக்னலை முன்மொழியவும் காத்திருக்கின்றனர். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் உசுப்பிவிடப்பட்ட மீனவர் சமுதாய மக்களின் அரசியல் அடையாளத்தை தவெக தந்துவிட்டதாக பரதர் சமுதாய மக்கள் புகழ்பாடி வருகின்றனர். இந்த புகழ்ச்சி ஓட்டு அரசியலுக்கு மீனவர்களை இழுத்து செல்வதால் இதை தடுத்து நிறுத்த கனிமொழி எம்.பி முன்னெடுக்கும் புதிய மாற்றம் தான் அஜிதா ஆக்னலுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கும் திட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அஜிதா ஆக்னலைக் கொண்டு தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் வசிக்கும் மீனவர் சமுதாயத்தை திமுக பக்கம் தன் வசபடுத்திக் கொள்ளலாம் என்று திமுக தலைமையை இவர்கள் நம்ப வைப்பதாகவும் சொல்கின்றனர்.
ஆகவே தூத்துக்குடி திமுக களம் சூடு பிடிக்கிறது என்றே சொல்லலாம். மேலும் இந்த புதிய மாற்றம் திமுகவின் வெற்றிக்கு கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களை உசுப்பிவிடுகிறது...
