“விளையாட்டை கையில் எடு… போதையை கைவிடு!” -தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி – செயின்ட் சேவியர்ஸ் அணி முதலிடம்.!
தூத்துக்குடி: இளம் தலைமுறையினரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில், தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடக்கு காவல் நிலையம் சார்பில் “விளையாட்டை கையில் எடு – போதைப்பொருளை கைவிடு” என்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
வடக்கு காவல் நிலையம் அருகிலுள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ், சென்ட் தாமஸ், கால்டுவெல் பள்ளி, லசால் பள்ளி அணிகள் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ் பள்ளி அணி முதலிடத்தையும், லசால் பள்ளி அணி இரண்டாமிடத்தையும், கால்டுவெல் பள்ளி அணி மூன்றாமிடத்தையும், சென்ட் தாமஸ் பள்ளி அணி நான்காமிடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். சுனில் நற்சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்கள் போதைப்பொருளைத் தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளர், மத்திய பாகம் காவல்நிலைய ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, போதைக்கு எதிராக நடந்த விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.
“விளையாட்டைத் தேர்ந்தெடுப்போம்" "போதைப்பொருளைத் தவிர்ப்போம்"போதையில்லா தூத்துக்குடியை உருவாக்குவோம்!” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
காவல்துறையினரின் இந்த முயற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சிறப்புமிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை வடக்கு காவல்நிலைய காவலர்கள், ஆய்வாளர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் செய்திருந்தனர். காவல்துறையின் முயற்சிக்கு மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ப்பட பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
