"சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை மக்கள் எளிதாக செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் M.S.முத்து வலியுறுத்தல்.!

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை மக்கள் எளிதாக செலுத்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ஆறு மாத காலவரம்பை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்கள் குறைவாக உள்ள நிலையில், அவை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பட்சத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு உள்ளாக நேரிடும்.

குறிப்பாக, தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கான ஒட்டுமொத்த தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவது சாதாரண மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மாத வருமானத்தை நம்பி குடும்பத்தை நடத்தி வரும் பொதுமக்கள் ஒரே தவணையில் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், வரி மற்றும் கட்டணங்களை முறையாக செலுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வரி மற்றும் கட்டணங்களை சிரமமின்றி சிறு தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். மாநகராட்சிக்கும் வருவாய் சீராக கிடைக்கும்.

எனவே, பொதுமக்களின் பொருளாதார சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!