வேலவன் ஸ்டோர்ஸ் விவகாரம் : தூத்துக்குடி இசக்கி ராஜா ஜாமீனில் விடுதலை.! 'சசிகலாவுக்கு நன்றி; யாரும் இதை கொண்டாட வேண்டாம்' என வேண்டுகோள்.!
தங்க நகையில் கலப்படம் புகார் விவகாரத்தில் வேலவன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்றதாக எழுந்த புகாரில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல 'வேலவன் ஹைப்பர் மார்க்கெட்' கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபர் தங்க நகை வாங்கியுள்ளார். அந்த நகையில் அதிக அளவில் வேறு உலோகம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நகை வாங்கி நபருக்கு உதவும் வகையில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவராக உள்ள தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா வேலவன் மார்க்கெட் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து நகை மதிப்பு தொகையான ரூ.4,22,000 வாங்கியுள்ளார். ஆனால், அத்துடன் விடாமல் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி கூடுதலாக ரூ.1 கோடி தர வேண்டும், தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் குறித்து கடை உரிமையாளர் சார்பில் வணிகர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இசக்கி ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து, விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் தென்பாகம் காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இசக்கி ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவரை தூத்துக்குடி குற்றவியல் ஜே எம் 1 நீதிமன்றம் நேற்று ஜாமீனில் விடுதலை செய்தது. இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்ததைத் தொடர்ந்து வீடியோ செய்தி ஒன்றைப் வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும், தனது விடுதலையைக் கொண்டாட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது வழக்கு மற்றும் சட்டப்போராட்டத்தின் போது ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்த வி.கே. சசிகலா அவர்களுக்கு இசக்கி ராஜா தேவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தனது ஆதரவாளர்களும், குறிப்பாக இளைஞர்களும் தனது ஜாமீன் விடுதலையை ஒட்டி எவ்விதக் கொண்டாட்டங்களிலும் (பேனர்கள் வைத்தல், பட்டாசு வெடித்தல், ஊர்வலம் செல்லுதல்) ஈடுபடக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "சட்டமும் நீதிமன்றமும் வழங்கியுள்ள ஜாமீன் நிபந்தனைகளையும் உத்தரவுகளையும் நாம் முழுமையாக மதிக்க வேண்டும். இளைஞர்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுக்காமலும், மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமலும் அமைதி காக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சமுதாய நலன் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நமக்கும் நமது இயக்கத்திற்கும் பலம் சேர்க்கும் என்பதால், இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அவரது முதன்மைச் செய்தியாக உள்ளது.
