தமிழகத்தில் புதிய மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் : சேவைகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயம்!
தமிழ்நாட்டில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள புதிய மாதிரி ஆவணப்பதிவு மையங்களில் (Model Document Registration Centres), பொதுமக்களிடம் வசூலிக்கப்பட உள்ள சேவைக் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. நிலம் மற்றும் சொத்துப் பதிவுகளை விரைவாகவும் எளிமையாகவும் முடிக்கும் நோக்கில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வழக்கமான சேவைக்கு ரூ.2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்கல் வழக்கமான சேவை மற்றும் பிரீமியம் சேவை ஆகிய இரண்டுக்கும் தலா ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அவசரத் தேவைகளுக்கான அதிவேக தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 சேவைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணங்கள் சேவைகளுக்கான கட்டணங்கள் மட்டுமே என்றும், வழக்கமான முத்திரைத்தாள் தீர்வை (Stamp Duty) மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களைப் பொதுமக்கள் தனியாகச் செலுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய மாதிரி ஆவணப்பதிவு மையங்கள் மூலம் சொத்துப் பதிவுப் பணிகளை விரைவாக முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அரசு அறிவித்துள்ள சேவைக் கட்டணங்கள் சொத்து வாங்குவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளன.

