உதவியாளர், தட்டச்சர் உள்பட 6574 பதவிகள் குரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜனவரி 10ம் தேதி எழுத்து தேர்வு.!

 

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பணியில் காலியாக உள்ள 6574 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எழுத்து தேர்வு வரும் ஜனவரி 10ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6574 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 6ம் தேதி வெளியிட்டது.

அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 291 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் 3762, வரி தண்டலர் 97, வருவாய் உதவியாளர் 96, வரி வசூலிப்பவர் 107, நிர்வாக உதவியாளர் 55, தட்டச்சர் 1,572, சுருக்கெழுத்து தட்டச்சர் 404, நேர்முக எழுத்தர் 60, செயல் அலுவலர் 46, வனக்காவலர் 40, விற்பனை உதவியாளர் 10, ஆய்வக உதவியாளர் 23, பதிவுறு எழுத்தர் 19 உள்ளிட்ட 46 வகையான பணிகளில் 6574 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்தனர். தேர்வுக்கு நவம்பர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது.

காலக்கெடு முடிவடைய ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 8ம் தேதி (நேற்று முன்தினம்) வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. மனித வள மேலாண்மை துறை, அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கியதால் இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் இரவு 11.59 மணியோடு நிறைவடைந்தது. இத்தேர்வுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்தை ஆண்டை விட அதிகம் ஆகும். அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் திருத்தங்களை வருகிற 11ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், வரும் ஜனவரி 10ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அரசு துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த 2025ம் ஆண்டு குரூப் 4 பணியில் 5307 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இத்தேர்வு எழுத 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 89,738 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் (82.61 சதவீதம்) எழுத்து தேர்வை எழுதி இருந்தனர். இதன் மூலம் ஒரு பணியிடத்துக்கு சுமார் 246 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!